சுங்கவரி ரத்து! உண்மையில் யாருக்கு இழப்பு?

உயர் மதிப்பு கொண்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் வாகனங்களுக்கான சுங்கவரியான 700 கோடி ரூபாய் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியா முழுவதும் பல்வேறு தனியார் கட்டமைப்பு நிறுவனங்கள், சாலைகளை பராமரித்து, அதற்குரிய கட்டணங்களை அந்த சாலையை உபயோகிக்கும் வாகன ஓட்டிகளிடம் வசூலித்து வருகிறது.
கடந்த 8-ம் தேதி, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று பிரதமர் மோடி அறிவித்தார், மேலும் நவம்பர் 24-ம் தேதி வரை நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனால், நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் கட்டமைப்பு நிறுவனங்களுக்கு கடந்த 8ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள இழப்பான 700 கோடி ரூபாயை, மத்திய சாலை போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுசெய்து வருகிறது.
முதலில் நவம்பர் 18-ம் தேதி வரை சுங்கவரி ரத்துசெய்யப்பட்ட நிலையில், அது 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் அறிவிப்பைத் தொடர்ந்து, 16 நாட்களில் மொத்தம் ஏறக்குறைய 700 கோடி ரூபாய் அளவுக்கு, தனியார் கட்டமைப்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்றுக் கொள்ள இருப்பதாக டி.என்.ஏ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும், இந்த இழப்பீட்டுத் தொகை சராசரியான மதிப்பீடுதான் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் ராகவ் சந்திரா தெரிவித்துள்ளார். எனினும் இந்த தொகையில் ஓரளவு இழப்பீட்டை உடனடியாக மத்திய அரசு வழங்கும் என்றும், அதன் மூலம் கட்டமைப்பு நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் கட்டமைப்பு நிறுவனங்கள், மத்திய அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம், அந்த நிறுவனங்களுக்கு நிதிச் சலுகை வழங்குதல் அல்லது கட்டணச் சலுகை காலத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் ஏதாவதொன்று என வகை செய்கிறது. ஆனால், தற்போது சுங்கவரி ரத்து அறிவிப்பால், அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை ஈடுசெய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரூபாய் நோட்டு பிரச்னையால் வாகனங்களிடம் இருந்து வரி வசூல் செய்யாத இந்த நாட்களில், வருவாயைக் கணக்கிட அக்டோபர் மாத சுங்கவரி வசூல் தொகையின் சராசரி கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் கட்டமைப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தனியார் நிறுவனம் ஒன்றின் இணை மேலாண் இயக்குனர் சுதிர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பீட்டுத் தொகையானது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு கட்டுமான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகையில் நேர் செய்து கொள்ளவும், அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சி. வெங்கட சேது

187
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: